கத்தார் விவகாரத்தில் சுமூக தீர்வை ஏற்படுத்துவதற்காக சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாட்டுத் தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தோஹாவில் கத்தார் மன்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் எகிப்து நாட்டின் ஜெட்டாவிற்கு சென்றார். அங்கு சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இப்பிரச்னையை தீர்ப்பது குறித்து விரிவாக விவாதித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட அமெரிக்காவுடன் கத்தார் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தத்தை டில்லர்சன் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அதனை அரபு நாடுகள் ஏற்கவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே கத்தாரை நம்பமுடியாது என அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, முகமது பின் சல்மானையும் டில்லர்சன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் கடந்த மாதம் முறித்துக்கொண்டன. இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் குவைத் நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.