இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ச தப்பியோடியதை அடுத்து, அங்கு நுழைந்த போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில் இறங்கி நீராடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டித்து தலைநகர் கொழும்புவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழும்புவுக்கு மக்கள் படையெடுப்பதால் அந்நகரமே திக்குமுக்காடி வருகிறது. உணவுப்பொருட்கள், எரிபொருட்களின் விலை உயர்வால் கொதிப்படைந்த மக்கள் இன்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவத்தினர் எவ்வளவு முயன்றும் போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து போக செய்ய முடியவில்லை. ஒருகட்டத்தில், ராணுவத்தினர் வைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழையப் போகிறார்கள் எனக் கேள்விப்பட்டதும், தனது குடும்பத்தினருடன் ரகசிய வழியில் அதிபர் கோட்டாபய ராஜபட்ச தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும், அங்கிருந்த சமையலறைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த உணவுப்பொருட்களை எடுத்து சமைத்து உண்டனர். இன்னொரு தரப்பினர், அதிபர் மாளிகையின் பின்புறத்தில் இருக்கும் உல்லாச நீச்சல் குளத்தில் இறங்கி நீராடினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சர்வாதிகார பாணியில் ஆட்சி நடத்தி வந்த கோட்டாபய ராஜபட்சவின் அதிபர் மாளிகையில் எப்போதுமே பல அடுக்கு ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். மாளிகையை சுற்றி 3 கி.மீ. தொலைவு வரை பொதுமக்கள் நடமாட முடியாதபடி கட்டுப்பாடு இருக்கும். இவ்வாறு கம்பீரமாக காட்சியளித்து வந்த இலங்கை அதிபர் மாளிகையின் இன்றைய நிலைமையை பார்க்கும் போது, சர்வாதிகாரம் என்றுமே அழிவை தான் ஏற்படுத்தும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.