அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த குடியரசுக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது ரஷ்ய கொடி வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
வரிச்சலுகை தொடர்பாக விவாதிப்பதற்காக செனட் சபை தலைவர் மிட்ச் மெக்கானலுடன், அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்றத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பகுதியில் நின்றிருந்த நபர் ஒருவர் திடீரென பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி, அதிபர் ட்ரம்ப் மற்றும் மிட்ச் மெக்கானல் மீது ரஷ்ய கொடிகளை வீசியெறிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அத்துடன் ரஷ்யாவுடன் கைகோர்த்து முறைகேடாக ட்ரம்ப் அதிபராகி விட்டார் என்றும் அவர் ஒரு தேச துரோகி என்றும் முழக்கமிட்டார்.
இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை உடனடியாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில் அவரது பெயர் ரயன் கிளேடன் என தெரியவந்தள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்பின் துரோகத்தைத்தான் விவாதிக்க வேண்டுமே தவிர வரிச் சலுகைகளை அல்ல என்றும் காவல்துறையினர் பிடிக்க வந்தபோது ரயன் குரல் எழுப்பினார்.