இங்கிலாந்தில் இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 2022இல் உயிரிழந்ததை அடுத்து, அவரது மகனான மூன்றாம் சார்லஸ் 2023-ம் ஆண்டு மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். 75 வயதாகும் அவருக்கு, தற்போது புற்றுநோய் இருப்பதாகவும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அறிந்ததும் உடனடியாக அவரது மகன் இளவரசர் ஹாரி லண்டன் திரும்பினார். அங்கு கிளாரன்ஸ் ஹவுசில் தங்கியிருந்த ஹாரியை, மன்னர் சார்லஸ், அரசி கமிலா ஆகியோர் தனியாக சந்தித்துப் பேசினர்.
இதைத்தொடர்ந்து அரச குடும்பத்தில் இணைய ஹாரி முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அரச குடும்பத்திற்கு மீண்டும் திரும்பி, பணிகளை முன்னெடுக்கவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு உதவவும் இளவரசர் ஹாரி ஆசைப்படுவதாக அரணமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமது குடும்பத்தை மிகவும் நேசிப்பதாக குறிப்பிட்டுள்ள ஹாரி, இதன்மூலம் பிரிந்திருக்கும் குடும்பங்கள் இணையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹாரியின் நடவடிக்கைகள் மற்றும் செயல்களை கூர்ந்து கவனித்துள்ள அரண்மனை வட்டாரம், அரச குடும்பத்திற்கு திரும்புவதை ஹாரி மிகவும் விரும்புவதாக தெரிவித்துள்ளது.
ஹாரியின் வருகை அரச குடும்பத்திற்கு பலனளிக்கும் என்று சார்லஸ் மன்னரும் கருதுவதாக கூறப்படுகிறது. மன்னர் மற்றும் ஹாரி தனியாகப் பேசிக்கொண்ட தகவல்கள் ஏதும் இதுவரை வெளிவராத நிலையில், அந்த 30 நிமிட சந்திப்பு புதிய மாற்றங்களைக் கொண்டுவர இருப்பதாக அரணமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. 2020ல் இருந்தே ஹாரி - மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து விலகி, அமெரிக்காவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.