சீன அதிபர் வருகையை அடுத்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த சில வாரங்கள் நடந்தது. சீன அதிபரை பிரதமர் மோடி தமிழரின் பாரம்பரியமான வேட்டி, சட்டை, மேல் துண்டு அணிந்து கைகுலுக்கியபடி உற்சாகமாக வரவேற்றார். இருவரும் பல்வேறு விஷங்கள் குறித்து பேசினர். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியா வந்தது இதுவே முதன்முறை எனக் கூறப்பட்டது. இந்தச் சந்திப்பை முடித்துக் கொண்டு இந்த மாதம் 12 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார் ஜின்பிங்.
இரு நாட்டு தலைவர்களின் இந்தச் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக அரசியல் ஆர்வலர்களால் பேசப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. காமன்வெல்த் நாடுகள் அவையில் அங்கம் வகிக்கும் இந்தியாவுக்கு சார்லஸ், இரு நாட்கள் அரசுமுறை பயணமாக வர இருக்கிறார் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் பருவகால மாற்றம் குறித்து மிக முக்கியமாக விவாதிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இரு நாட்டு சந்தை வியாபாரம் சார்ந்த நிலைத்தன்மை குறித்தும் சமூக பொருளாதார சூழல் குறித்தும் விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக இளவரசர் சார்லஸ், வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி வர உள்ளார் என அதிகாரிகள் மட்டத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
சார்லஸ் அலுவலக வட்டார அதிகாரி ஒருவர் இந்தச் சந்திப்பை உறுதி செய்துள்ளார். இந்தியா உடனான 10வது சந்திப்பாக இது அமைய உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.