இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் எத்தனை கொடூரமானது என்பதற்கு சான்றான ஒரு நாடு இத்தாலி. ஆயிரக்கணக்கான உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ள இத்தாலியில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. நம்பிக்கை தரும் அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மொத்த பாதிப்பு என பார்த்தால் உலகிலேயே அமெரிக்கா, ஸ்பெயினை தொடர்ந்து மூன்றாமிடத்தில் இத்தாலி உள்ளது.
எனினும் முதன்முறையாக இங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஒருலட்சத்து 8 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது. வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து முதன்முறையாக இந்த எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் இது மிக முக்கியமான மைல்கல் என்றும் இத்தாலி அரசு கூறியுள்ளது.
அத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுகாதார பணியாளர்கள் , மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரது அயராத சேவைக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக மருத்துவர்கள் சங்கம் கூறுகிறது. இத்தாலி சரியான பாதையில் செல்கிறது என கூறும் நிபுணர்கள், இரண்டாவது அலை வீசாமல் பார்த்து கொள்வதில் அரசு கவனம் செலுத்தினால் விரைவில் கொரோனாவை இத்தாலி வெல்லும் என தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நெருக்கடி குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பாதிப்பு குறைந்து வருவதன் எதிரொலியாக மே 4 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் கோன்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள இத்தாலி பிரதமர் கோன்டே, ஊரடங்கு தளர்வுகள் உடனடியாக தளர்த்தப்பட்டால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்றும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அது சீர்குலைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு மாகாணத்தின் நிலைமையும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கோன்டே கூறியுள்ளார்.