பூகோளரீதியில், இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்திருக்கிறது தீவுநாடான இலங்கை. இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளாத நிலையில், அதிபர் தேர்தலை சந்திக்கிறது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் அதிபர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் கூட பெண் வேட்பாளர் இல்லை.
38 வேட்பாளர்களின் பெயர்களும் சின்னங்களும் பொறிக்கப்பட்ட வாக்குச்சீட்டு தயாராகியுள்ளது. அத்தனை பெயர்களை சுமக்கும் இந்த வாக்குச்சீட்டு, 2 அடி நீளம் கொண்டிருக்கிறது. 18 வயது நிரம்பிய, மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் பேர், தங்கள் அதிபரை தேர்ந்தெடுக்க, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ராணுவம், காவல் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தபால் முறையில் வாக்கு செலுத்தியுள்ளனர்.
முன்னுரிமை வாக்கு என்ற முறையை பின்பற்றுகிறது இலங்கை தேர்தல் ஆணையம். அதாவது, ஒரே வாக்குச்சீட்டில் 1, 2 , 3 என, மூன்று வேட்பாளர்களுக்கு, தங்கள் வாக்கை, வாக்காளர்கள் அளிக்க முடியும். வாக்குச்சீட்டில் 'ஒன்று' என்று குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர், அந்த வாக்காளரின் முதல் முன்னுரிமையைப் பெற்றவர் ஆகிறார். இரண்டு, மூன்று என அடுத்தடுத்த இடங்களில் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்கள், அந்தந்த வாக்காளர்களின் அடுத்தடுத்த முன்னுரிமைகளை பெறுகின்றனர்.
இலங்கையில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறுகிறது என்பதைப் பார்க்கலாம்.
நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில், செல்லாதவை தவிர, மீதமுள்ள வாக்குகளே மொத்த வாக்குகள். இந்த மொத்த வாக்குகளில், இருந்துதான், வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
இந்த வகையில், 'ஒன்றாம் எண்' இட்ட முன்னுரிமை கொண்ட வாக்குகளை, 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக பெறும் வேட்பாளரே அதிபராக தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை, எந்த வேட்பாளரும் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால், என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா...?
ஒருவேளை அப்படி நேரிட்டால், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதாவது, ஏற்கனவே நடந்த வாக்கு எண்ணிக்கையில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு செல்வார்கள். மற்ற வேட்பாளர்கள் அனைவரும், போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
இந்த இரண்டாம் சுற்றில், வாக்குச்சீட்டுகளில் 2 மற்றும் 3 ஆம் எண்ணால் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். அதாவது, ரேங்கிங் அடிப்படையில், Second Rank. Third Rank என்ற வகையில் இந்த வாக்கு எண்ணிக்கை அமையும். இந்த சுற்றில், இரண்டு வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள், மொத்த வாக்குகளுடன் சேர்த்து கணக்கிடப்படும். இப்போது, எந்த வேட்பாளர் 50 விழுக்காடு வாக்குகளை கடக்கிறார்களோ, அவர் தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில், இதுவரை முதல் சுற்றிலேயே, அதாவது ஒன்றாம் எண் கொண்ட முன்னுரிமை கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையிலேயே அதிபர் யார் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இந்த தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.