அமைதியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண உக்ரைன் முட்டுக்கட்டையாக உள்ளது : புதின்

அமைதியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண உக்ரைன் முட்டுக்கட்டையாக உள்ளது : புதின்
அமைதியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண உக்ரைன் முட்டுக்கட்டையாக உள்ளது : புதின்
Published on

உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே ரஷ்யா விரும்புவதாக, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  

கடந்த 9 நாட்களாக உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, கெர்சன், எனர்கோடர், மிக்கலேவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றியது. கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் ரஷ்ய படைகள் முயன்று வருகின்றன. இதன் காரணமாக கிழக்குப் பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவியது.

இதையடுத்து மீட்புப் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது. அதே நேரம் பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. 

இதைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி உக்ரைனில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மரியபோலில் உள்ள துறைமுக நகரில் இருந்து பொதுமக்களை ரஷ்யப்படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும் மரியபோல் நகரை விட்டு வெளியேற மக்களுக்கு 5 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது.

அதே போல் கார்கிவ், சுமி ஆகிய நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாட்டு மக்களை மீட்க பேருந்துகள் தயாராக இருப்பதாகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் ரஷ்யா தெரிவித்தது. மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் சூழலில், போரால் பாதிக்கப்பட்ட கார்கிவ் நகரில் இருக்கும் வெளிநாட்டவர்களை மீட்க ரஷ்யா தயாராக இருந்ததாகவும், ஆனால், உக்ரைன் ராணுவம் அதை தடுப்பதாகவும் ரஷ்ய அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், நேட்டோ படைகளுக்கும், தங்களுக்கும் இடையே மோதலை தூண்டிவிடவே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முயற்சிக்கிறார் என்றும் ரஷ்யா விமர்சித்துள்ளது.

உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே ரஷ்யா விரும்புவதாகவும், ஆனால், தீர்வு காண விரும்பினாலும் உக்ரைன் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளதும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.  மேலும், ரஷ்ய மீதான பொருளாதாரத் தடைகள் போர் அறிவிப்புக்கு நிகரானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com