அதிபர் மைத்ரி பால சிறிசேன இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 19இல் இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்ரிபால சிறிசேன கலைத்தார். இதனை எதிர்த்து, ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. மேலும், பொதுத் தேர்தலுக்கான பணிகளுக்கு தடைவிதித்ததோடு, நாடாளுமன்றம் நடைபெற தடையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், அதிபர் மைத்ரி பால சிறிசேன இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரே கருத்துடன் இந்தத் தீர்ப்பு அளித்தார்கள். நாடாளுமன்றத்தை கலைக்க 3இல் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அதிபர் தன்னிச்சையாக கலைக்க முடியாது என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 26 தேதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேன அதிரடியாக நீக்கினார். அதோடு, முன்னாள் அதிபர் ராஜபக்ஷ்சவை பிரதமராக நியமித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷ்சவுக்கு பெரும்பான்மை கிடைக்காததை உணர்ந்து கொண்ட சிறிசேன, நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்தார்.