அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் உள்ளனர்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் மீண்டும் நேருக்குநேர் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றது பேசுபொருளானது. அப்போது தடுமாற்றம் கண்ட ஜோ பைடன் குறித்தும் அவர்களுடைய கட்சியினராலேயே விமர்சிக்கப்பட்டது. இதற்குப் பிறகும் ஜோ பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அதற்கு ஏற்றாற்போல் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ’புதின்’ என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ’ட்ரம்ப்’ என்றும் தவறுதலாக கூறினார். என்றாலும், இத்தேர்தலில் இருந்து தாம் பின்வாங்கப்போவதில்லை என் ஜோ பைடனே உறுதியாகத் தெரிவித்து இருந்தார்.
இதுபோக, ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். கட்சியின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமாக இருந்தாலும்,, எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவது எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் நிறுத்துவதற்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்பிற்கு பெருகிவரும் ஆதரவுக்கு இடையே ஜோ பைடன் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜோ பைடனின் முடிவை அவரது மனைவி ஜில் பைடனும் வரவேற்றுள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில் பைடனின் அறிவிப்புக்கு ஹாட்ர்ட் சிம்பள் பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் நிறுத்துவதற்கு ஹிலாரி கிளிண்டன் ஆதரவை தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. டிரம்ப் வெற்றி பெறுவதைத் தடுப்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் நல்லது" என்று எக்ஸ் தள பக்கத்தில் விசிக எம்பி ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.