இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார அவசர நிலை அங்கு ராணுவத்தின் தலையீட்டை அதிகரிக்கக் கூடும் என ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிசெல் பேஷெலெட் கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த பொருளாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐநா மனித உரிமை ஆணையர், இலங்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்வது அவசியம் எனக் குறிப்பிட்டார். மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை கண்காணிப்பதும், அச்சுறுத்துவதும் தொடர்கதையாகி இருப்பதாகவும், மாணவர்கள், மருத்துவர்கள், மதத்தலைவர்கள் உள்ளிட்டோரும் அதே நிலையை சந்திப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.