6 தசாப்தங்களுக்கு மேலாக மக்கள்தொகையில் முதலிடம் வகித்துவந்த சீனாவில் முதன்முறையாக கடந்த ஆண்டில் மக்கள் தொகை குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனாவில் அங்குள்ள தொழிலாளர்களின் வயதைக்காட்டிலும் பிறப்பு எண்ணிக்கை குறைவாகவே பதிவாகியுள்ளது. இது பிறப்பு விகித வீழ்ச்சியை காட்டுகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியானது தடைபடலாம் என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். பெய்ஜிங்கின் தேசிய புள்ளியியல் பணியகம் வெளியிட்ட தரவில், 2021ஆம் ஆண்டின் இறுதியில் 1.4126 பில்லியனாக இருந்த மக்கள்தொகை 2022இல் 1,411,750,000 ஆக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டின் இறுதியில் மக்கள்தொகை 850,000 குறைந்து எண்ணிக்கை சரிந்துள்ளது.
கடந்த ஆண்டில் பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியன் எனவும், இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியன் எனவும் NBS தெரிவித்திருக்கிறது. 1960ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடூர வறுமையால் இதற்கு முன்பு சீனாவில் மக்கள்தொகை குறைந்தது. மாவோ சேதுங் விவசாயக் கொள்கையால் பெரும் லீப் ஃபார்வர்டு எனப்படும் பேரழிவு ஏற்பட்டது.
அதன்பிறகு அதீத மக்கள்தொகை அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் 1980-களில் “ஒரு குழந்தை கொள்கை”யை சீனா அமல்படுத்தியது. அந்த கொள்கையை 2016இல் முடித்துக்கொண்டது சீனா. அதன்பிறகு ஒரு தம்பதியர் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள 2021இல் அனுமதி அளித்தது. ஆனால் மக்கள்தொகை குறைவுக்கே காரணமாக அமைந்துள்ளது.
உயர்ந்து வரும் வாழ்க்கை பொருளாதாரம், பணிகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் உயர்கல்வியை நாடுதல் போன்றவை குழந்தை பிறப்பு குறைத்துள்ளது. கடந்த தசாப்தங்களில் வழக்கத்தில் இருந்த ஒரு குழந்தை கொள்கை காரணமாக சீனர்கள் சிறு குடும்ப வாழ்க்கைமுறைக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொண்டனர் என்கிறார் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆய்வாளர் ஜியுஜியான் பெங். மேலும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு திறமையான கொள்கைகளை உருவாக்கவேண்டும். இல்லாவிட்டால் குழந்தை பிறப்பு இன்னும் கீழே இறங்கிவிடும் என்கிறார் அவர்.
சீனாவில் ஏற்கனவே குழந்தைபிறப்பை ஊக்குவிக்க உள்ளூர் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். உதாரணமாக, தெற்கு மெகாசிட்டியான ஷென்செனில், குழந்தை பிறந்தது முதல் 3 வயது வரை பிறப்பு போனஸ் மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. அதாவது முதல் குழந்தை பெறும் தம்பதியருக்கு 3000 யுவான் வழங்கப்படுகிறது. 3ஆம் குழந்தை பிறக்கும்போது அந்த தொகையானது 10,000 யுவானாக அதிகரிக்கப்படும்.
குறிப்பாக, கொரோனா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பிரச்னைகளால் சீனாவின் பொருளாதாரம் 3% குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.