வரி மோசடி புகாரில் பிரபல பாப் பாடகி ஷகீராவுக்கு, ஸ்பெயினில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொலம்பியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான ஷகீரா, தனது இசை ஆல்பங்கள் மூலம், 90-களில் இசையுலகில் கொடிக்கட்டி பறந்தவர். இவரின் “Hips don't Lie”, “Whenever, Wherever”, “Waka Waka” உள்ளிட்ட இசை ஆல்பங்கள் மூலம் உலகம் எங்கும் உள்ள இசை ரசிகர்களை ஈர்த்தவர். மேலும் உலகம் முழுவதும் இசைப்பயணம் மேற்கொண்டு பாடல்களை பாடியும் வருகிறார். 3 கிராமி விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு காலத்தில் ஸ்பெயினில் இருந்தபோது, 116 கோடி ரூபாய் வருமானத்திற்கான வரி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தவறை ஒப்புக்கொண்டு வரி செலுத்துமாறு ஷகீராவுக்கு, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் நோட்டீஸ்ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் தான் ஸ்பெயினில் வசிக்கவில்லை என்றும், அப்போது தனது காதலரும், பார்சிலோனா கால்பந்து வீரரருமான ஜெரார்டு பிக் என்பவருடன், பஹாமாஸ் நாட்டில் வசித்து வந்ததால் வரி செலுத்த வேண்டியதில்லை என குற்றச்சாட்டை மறுத்து தனது வழக்கறிஞர்கள் மூலம் பாடகி ஷகிரா அறிக்கை அளித்துள்ளார்.
கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில், பாடகி ஷகிரா சர்வதேச இசைப் பயணம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டிற்குப் பிறகே முழுமையாக ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பியதாகவும், தற்போது வரை அதாவது 136 கோடி ரூபாய் வரிப் பணத்துடன் தனது அனைத்து விதமான வரிகளையும் முழுமையாக, வருமான வரி அலுவலகத்தில் செலுத்திவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் குற்றமற்றவர் என்பதால், நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்தித்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மறுத்துள்ள ஸ்பெயின் நாட்டு வழக்கறிஞர்கள், பஹாமாஸ் நாட்டில் சொந்த வீடு இருந்தாலும், பாடகி ஷகிரா கடந்த 2011-ம் ஆண்டே ஸ்பெயின் நாட்டில் குடியேறி விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது வருமான வரி வழக்கின் மனுவை ஷகிரா நிராகரித்துள்ளநிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஷகீராவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் வரி ஏய்ப்பிற்காக 150 கோடி ரூபாய் அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம் என ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை குவிக்கும் பிரபலங்களின் பட்டியலை, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் "பண்டோரா பேப்பர்ஸ்" என்று அழைக்கப்படும் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கசியவிட்டது. இதில் பிரபல பாப் பாடகி ஷகிராவின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.