ஈரான் - ஈராக் போராக இருந்தாலும், குவைத் மீதான அமெரிக்காவின் கோர தாக்குதலானாலும், இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரச்சனையானாலும்.. கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனிப்பெரும் நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.
உதாரணத்துக்கு, 1991ல் குவைத் - அமெரிக்கா இடையேயான போரின்போது கேரளாவில் மாபெரும் பேரணியை நடத்தியிருந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்.
அப்போது கூட்டத்தை பார்த்து, “இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சதாம் உசேனின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியான நாங்கள் உடன் நிற்கிறோம். எனில் நீங்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தது, முக்கியமான ஒரு நிகழ்வு. அவரது கேள்விக்கு அங்கிருந்த கூட்டம், “சதாம் உசேன் வாழ்க.. அவரது புரட்சி வாழ்க” என்று கூறிய முழக்கம் விண்ணை எட்டியது.
இதற்கு பின் நடந்த தேர்தலில், 14 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் 12 மாவட்டங்களில் வெற்றியை பதிவு செய்தது இடது ஜனநாயக முன்னணியின் கூட்டணி. இதேபோலத்தான் ராம ஜென்மபூமி பிரச்னையின்போது குரல் எழுப்பியபோதும் இடது முன்னணிக்கே வாக்கு வங்கி கூடியிருந்தது. “இதுபோன்ற போராட்டங்களால் இடதுசாரி கட்சிகளுக்கு 2 சதவீத வாக்குகள் கூடியுள்ளது” என கருத்து தெரிவித்திருந்தார் முன்னாள் நிதியமைசர் தாமஸ் ஐசாக்.
இதேபோல மத்திய கிழக்கில் பிரச்னைகள் எழும்போதெல்லாம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இப்போது ஏற்பட்டுள்ள பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையிலும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது.
ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் பரவலான ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதன் அடிப்படையில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை ஜனநாயக முறையில் தீர்க்க வேண்டும். பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இஸ்ரேலில் உள்ள வலதுசாரி நெதன்யாகு அரசாங்கம், பாலஸ்தீன நிலங்களை கண்மூடித்தனமாக ஆக்கிரமித்து மேற்கு பகுதியில் யூதர்களின் குடியேற்றங்களை நிறுவி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 40 குழந்தைகள் உட்பட 248 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்
ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீன மக்களின் தாயக நிலத்திற்கான நியாயமான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். அனைத்து இஸ்ரேலிய சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் பாலஸ்தீன நில ஆக்கிரமிப்புகளையும் திரும்பப் பெற வேண்டும். பாலஸ்தீனம் - ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு செயல்பட தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவின் அமைச்சர் பேபி, இதுபற்றி கூறுகையில், “வரலாற்று ரீதியாக பார்த்தால் இந்தியா பாலஸ்தீனியத்தின் விடுதலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் ஆதரவாக இருந்துவந்துள்ளது. ஆனால் தற்போதுள்ள பாஜக அரசு, அமெரிக்காவுக்கு கீழ்பணிந்து நடக்கவே விரும்புவதாக தெரிகிறது” என்றுள்ளார்.
அமெரிக்கா இஸ்ரேலுக்கு தன் ஆதரவை தெரிவித்து, போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக, கேரள அரசு திட்டவட்டமாக பாலஸ்தீனிய மக்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இதே நிலைப்பாட்டில்தான் சிபிஎம்-ம் இருக்கிறது. இவர்களை பொறுத்தவரை, “ஹமாஸ் என்பது பாலஸ்தீனியம் இல்லை. அதேபோல பாலஸ்தீனியம் இல்லை. அப்பாவி மக்களை அரசுடனோ, பாதிக்கப்பட்ட நாட்டை தீவிரவாத குழுவுடனோ ஒப்புமை படுத்தவேண்டாம். காஸாவில் ஹமாஸை நடத்தும் வன்முறைகளை நாங்களும் கண்டிக்கிறோம்” என்ற நிலைப்பாடுதான் இவர்களுடையது.
சர்வதேச அரசியலில் இடதுசாரிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் கேரளாவின் மார்க்சிஸ்ட் மற்றும் இடது ஜனநாயக முன்னணி தனது அரசியல் பலத்தையும் உயர்த்திக்கொண்டே வருகிறது என்றே கணிக்கப்படுகிறது. எங்கோ நடக்கும் ஒரு போரும் பதற்றமும், கேரளாவின் அரசியலில் ஆட்சி ஆதிகாரத்தை மாற்றும் அளவுக்கும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைவது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.