அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சக்கர நாற்காலியுடன் சிக்கிக்கொண்ட மனிதரை, போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் சென்ற பெண் காவலர் திடீரென காப்பாற்றிய சம்பவம் மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதுபற்றிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பாகப் பேசப்படுகின்றன.
அந்தப் பெண் காவலரின் பெயர் எரிக்கா உரியா. சேக்ரமெண்டோ நகரின் லோடி பகுதியில் அவர் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே சக்கரநாற்காலியுடன் 66 வயதான அந்த மனிதர் தண்டவாளங்களில் சிக்கிக்கொண்டதை அறிந்தார். உடனே அவரை நோக்கி பெண் காவலர் ஓடிய காட்சி பதிவாகியுள்ளது.
ரயில் வேகமாக வருவது தெரிந்தது. சிக்னல் நிறுத்தப்படவேண்டும். மின்னல் வேகத்தில் அவர் சக்கரநாற்காலியில் இருந்து இறக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். பிறகு அந்தக் காட்சியில் காலில் காயமடைந்த மனிதருக்குப் பின்னால் ரயில் வேகமாக விரைந்து செல்கிறது. உயிரையும் துச்சமாக மதித்து உதவிய பெண் காவலரின் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
ஃபேஸ்புக் பக்கத்தில் காவலர் எரிக்கா உரியாவின் செயலை நினைத்துப் பெருமைப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.