கொசுவுக்கு மரபணு சோதனை நிகழ்த்தி திருடனை கைது செய்த சீன போலீஸ்... முழு விபரம்!

கொசுவுக்கு மரபணு சோதனை நிகழ்த்தி திருடனை கைது செய்த சீன போலீஸ்... முழு விபரம்!
கொசுவுக்கு மரபணு சோதனை நிகழ்த்தி திருடனை கைது செய்த சீன போலீஸ்... முழு விபரம்!
Published on

குற்றப் புலனாய்வில் மனிதர்கள், விலங்குகளின் மரபணு பரிசோதனை என்பதை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். விசித்திரமான நிகழ்வாக, கொசுவின் ரத்தத்தை மரபணு சோதனை செய்து, திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரை சீன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புஜியான் மாகாணத்தின் பூஜோ என்ற இடத்தில் ஒரு வீட்டில் திருட்டு நடைபெற்றது. இது குறித்த புகாரில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல்துறையினர், வீடு உள்பக்கமாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். எனவே திருடன் பால்கனி வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைந்திருக்க முடியும் என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.மேலும் வீட்டிற்குள் இருந்த தடயங்களை சேகரித்தபோது சுவற்றில் ரத்தக்கறை இருந்ததையும், தரையில் கொசுக்கள் இறந்து கிடந்ததையும் கண்டனர்.

வீட்டு உரிமையாளர்கள் புதிதாக வர்ணம் பூசப்பட்ட தங்கள் குடியிருப்பில் இரத்தக் கறைகளை சுத்தம் செய்யாமல் விட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த ரத்தம் கொசு உறிஞ்சிய திருடனின் ரத்தமாக கூட இருக்கலாம் என சந்தேகப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், வீட்டு உரிமையாளரின் படுக்கைக்கு அருகே இரு கொசுவர்த்தி சுருள் எரிந்து தீர்ந்த நிலையில் கிடந்துள்ளது. வீட்டு உரிமையாளர்கள் இதை தாங்கள் செய்யவில்லை என்று கூறவே இதுவும் திருடனின் செயலாகத் தான் இருக்கும் என போலீசார் அனுமானித்துள்ளனர்.

பின்னர் அந்த கொசுக்களின் ரத்தத்தை மரபணு சோதனைக்கு அனுப்பி, அந்தப் பகுதியில் குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் ரத்தத்துடன் அதை ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில் இரண்டும் ஒத்துப்போன ஒருவரைக் கைது செய்தனர். பின்னர் சாய் (CHAI) என்ற பெயர் கொண்ட அவர்தான் திருட்டில் ஈடுபட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

திருடன் அந்த வீட்டில் இரவு முழுவதும் தங்கியதாகவும், தானே உணவை சமைத்து சாப்பிட்டுவிட்டு வீட்டு உரிமையாளர்களின் படுக்கையில் ஓய்வெடுத்துள்ளதாக சீன போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டில் மட்டுமல்லாது மேலும் 4 திருட்டு வழக்குகளில் தான் ஈடுபட்டதை சாய் ஒப்புக் கொண்டுள்ளார். குற்றம் நடந்த 19 நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான மரபணு சோதனைக்கு பின் அவர் கைது செய்யப்பட்டதாக சீன செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com