கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ராட்லினிலுள்ள மரியான் எல். என்பவரின் வீட்டிற்குச் செல்ல 76 வயது உறவினர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். அவர் திட்டமிட்டபடி மரியானின் வீட்டிற்கு சென்றபோது, அவர் பைத்தியம் போல் வீட்டிற்கு வெளியே அலைந்து திரிவதை கவனித்திருக்கிறார். வீட்டிற்குள் சென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டு சோஃபாவில் மம்மியாக்கப்பட்ட உடல் வைக்கப்பட்டு அதன்மீது 2009ஆம் ஆண்டு செய்தித்தாள்களை குவியலாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பயந்துபோன உறவினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து ராட்லினின் ரோகோஸினாவிலுள்ள மரியானின் வீட்டிற்குச் சென்ற போலீசார் மம்மியாக்கப்பட்ட உடலைக் கைப்பற்றினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான மரியானை துணை மருத்துவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். மேலும், சோஃபாவில் வைக்கப்பட்டிருந்த மம்மி உடலானது 95 வயதில் 2010ஆம் ஆண்டு இறந்த, மரியானின் தாயின் உடல் என சந்தேகித்ததாகவும், அதன்பேரில் அவருடைய கல்லறையை தோண்டி பார்த்தபோது அது வெறுமையாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து இறந்த தாயின் உடலை புதைத்தபிறகு, மரியான் மீண்டும் கல்லறைக்குச் சென்று உடலை தோண்டி எடுத்துவந்து, அதனை பதப்படுத்தி வீட்டில் வைத்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். உடலை தோண்டி எடுத்த குற்றத்திற்காக மரியான்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் அவரை நிபுணர்கள் பரிசோதிப்பர் எனவும் வழக்குரைஞர் ஜோனா ஸ்மோர்செவ்ஸ்கா தெரிவித்திருக்கிறார்.