அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் என்ற பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்கு hammerhead என்ற வகை புழுக்கள், பூமியிலிருந்து வெளியே வர துவங்கியுள்ளன. இவ்வகை புழுக்கள், பாதியாக வெட்டினாலும் மீண்டும் உருவாகும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Hammerhead என்று அழைக்கப்படும் இவ்வகையான இப்புழுக்களின் தலை பார்ப்பதற்கு சுத்தியலை போன்ற வடிவத்தை கொண்டிருக்கும். பொதுவாக ஆக்கிரமிப்பு இனங்களாக அறியப்படும் இவ்வகையான புழுக்கள், தான் வாழும் சூழலுக்கு கேடு விளைவிக்குமாம். மிகவும் விஷத்தன்மை கொண்டவையாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. மனிதர்களின் தோலில் இதுபட்டால் நமக்கு தோல் அரிப்பு போன்றவை ஏற்பட்டுவிடுமாம். மேலும் இவை தோல் அரிப்பை ஏற்படுத்தி, உடலுக்குள் நச்சுக்களை சுரக்குமென கூறப்படுகிறது.
ஒருவேளை தெரியாத்தனமாக இதை நம் வீட்டு செல்லப்பிராணிகள் உட்கொண்டுவிட்டால், அவற்றுக்கு விஷமாகவே மாறிவிடும். பெரும்பாலும் இவை அமெரிக்காவில் மழைக்காலத்திற்கு பிறகு புல்வெளிகள், நடைபாதைகள், சாலைகளில் காணப்படுமாம். வெப்ப மற்றும் ஈரப்பதமான சூழலியே இவை வாழும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Ashley Morgan-Olvera என்பவர் இது குறித்து தெரிவிக்கும்போது, “இந்த புழுக்களை இரண்டு துண்டுகளாக வெட்டினால், வெட்டிய துண்டிலிருந்து இன்னொரு புது புழு உருவாகும். அதாவது ஒரு புழுவை வெட்டினால், அதிலிருந்து இரண்டு புழுக்கள் உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வகையான புழுக்களிடமிருந்து தப்பிக்க, அவற்றை கொல்வதே வழியாம். அதானால் இதைக் கண்டவுடன் கையுறைகள் அணிந்தபடி அவற்றை பிடித்துவைக்க வேண்டும். பின் உப்பு, வினிகர் (அ) சிட்ரஸ் எண்ணெய்யை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுவைத்து அதில் இப்புழுவை ஒரு இரவு உரைய வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் பிறகு இந்த புழுக்கள் இறந்துவிடும். அப்படி அவை இறந்தபின்னும், அதன் உடலை கைகளால் தொடாமல் அப்புறப்படுத்தவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பாராத விதமாக நாம் தொட்டாலும், உடனே நாம் சுத்திகரிப்பான்களை பயன்படுத்தி நம் கைகளை நன்கு கழுவ வேண்டுமாம்.
Shovel head or Arrow head என்று அழைக்கப்படும் இந்த சுத்தியல் வடிவ புழுக்கள் 15 இன்ஞ் வரையில் நீளமாக வளரக்கூடியவை. இவை சில சமயம் பார்ப்பதற்கு பாம்புகள் போலவும் காட்சியளிக்கின்றன. இவற்றின் வாய்ப்பகுதியில் விஷம் நிறைந்துள்ளதால், ஒட்டுண்ணிகளை சுமந்து செல்லும் ஆற்றல் படைத்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.