அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த போது நரேந்திர மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நபர் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் தொடக்கம் முதலே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு,செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானில் தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா என மோடி கேட்டார் என்று தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் சேர்ந்து தன்னை மத்தியஸ்தத்திற்கு அழைத்தால் அதற்கு தயாராக இருப்பதாக தாம் தெரிவித்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்கும்படி டிரம்ப்பிடம் பிரதமர் மோடி ஒருபோதும் கேட்டுக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் உடனான பிரச்னைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், மத்தியஸ்தம் செய்யத் தயார் என்ற ட்ரம்பின் பேச்சை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றுள்ளார். காஷ்மீர் தொடர்பான ட்ரம்பின் பேச்சு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர். இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் அமெரிக்கா அதை வரவேற்கும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருவதால் பேச்சுவார்த்தை தொடங்க இது உகந்ததாக இருக்கும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க அமெரிக்கா உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் பேச்சால் எழுந்த சர்ச்சையை தணிக்கும் வகையில் அமெரிக்க அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ட்ரம்ப்பை சந்தித்த போது ஷிம்லா ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டது உண்மை என்றால் அவர் நாட்டு நலனில் அக்கறைகொள்ளவில்லை. வெளியுறவுத் துறை இந்த விவகாரத்தை மறுத்திருந்தாலும் ட்ரம்புடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது என்ன என்பது குறித்து அவர் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.