நியூசிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையும் பிரதமராகியுள்ள ஜெசிந்தா ஆர்டனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வாழ்த்துக் கூறியுள்ள பிரதமர் மோடி, "நியூசிலாந்து தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள ஜெசிந்தா ஆர்டனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் " என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "கடந்த ஆண்டில் நம்முடைய சந்திப்பை நினைவுகூர்கிறேன். ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தியா - நியூசிலாந்து இடையிலான நட்புறவை மேம்படுத்துவோம்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் மிகப்பெரிய மைல்கல் வெற்றியை பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பெற்றுள்ளார். அவரது தொழிலாளர் கட்சி 49.2 சதவீதம் வாக்குகளைப் பெற்று 64 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜெசிந்தாவை எதிர்த்து நின்ற தேசிய கட்சி 27 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
கொரோனா பேரிடர் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்ததில் ஜெசிந்தா ஆர்டனுக்கு நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.