2 நாள் பயணமாக போலந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் Donald Tusk உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா - போலந்து இடையேயான தூதரக உறவு தொடங்கி 70 ஆண்டுகள் ஆகின்றன. இருநாட்டு உறவையும், கொள்கை ரீதியிலான நட்புறவாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவும் போலந்தும் சர்வதேச அரங்கில் பரஸ்பரமாக இயங்குகிறது. போலந்து நிறுவனங்கள், மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய முன்வர வேண்டும். உக்ரைனிலும், மேற்காசியாவிலும் தொடரும் பிரச்னைகள் ஆழ்ந்த கவலை அளிக்கின்றன. எந்தப் பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலேயே அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டுவர முடியும்” என்றார்.
பயணத்தின் அடுத்தகட்டமாக பிரதமர் மோடி, உக்ரைன் நாட்டுக்கு செல்கிறார். உக்ரைன் தலைநகர் கீவுக்கு ரயில் மூலம் பிரதமர் மோடி பயணப்படுகிறார். 10 மணிநேரம் பயணித்து உக்ரைன் நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு ஏழு மணிநேரம் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 3ஆம் முறையாக பதவியேற்றவுடன் கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்திருந்தார். ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் தீவிரமாக தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபருடனான இந்த சந்திப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்திருந்தார். இச்சூழலில், உக்ரைன் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணப்படுவது சர்வதேச அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.