அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவை தாக்குவதற்கான திட்டத்தை இம்மாத மத்தியில் வகுக்கப் போவதாக வடகொரியா அறிவித்திருக்கிறது.
வட கொரியாவில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குவாம் தீவைத் தாக்கப் போவதாக வடகொரியா ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தது. தற்போது, வடகொரியாவின் செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், இம்மாத மத்தியில் தாக்குதல் நடத்தப்போவதாக திட்டவட்டமாக கூறியுள்ளது.
அந்த செய்தியின்படி, ஜப்பானுக்கு மேல் பறந்து செல்லும் வகையிலான ஏவுகணையைக் கொண்டு, குவாம் தீவிற்கு சுமார் 30 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவில் தாக்கப்போவதாக வடகொரியா கூறியிருக்கிறது. இது தொடர்பான திட்டம் இந்தமாத மத்தியில் முழுமையடையும் என்றும் வடகொரியா கூறியிருக்கிறது.
வடகொரியா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கும் குவாம் தீவில், சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர், நீர்மூழ்கிக் கப்பல் அடங்கிய அமெரிக்காவின் ராணுவ தளம் உள்ளது, ஒரு விமான ஓடுதளம், கடலோரக் காவல்படையும் உள்ளது. கடலில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த மிக முக்கிய காரணமான உள்ளது குவாம் தீவு என்பது குறிப்பிடத்தக்கது.