பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 'சிந்தி' என அழைக்கப்படும் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'சிந்துதேஷ்' தனிநாடு. சிந்து என்பது சிந்து சமவெளி நாகரீகத்தின், வேத மதத்தின் பிறப்பிடமாக பாவிக்கப்படுகிறது. இதை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்திருந்தனர். பின்னர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அவர்கள் இந்தப் பகுதியை இஸ்லாமியர்களிடம் 1947-ல் ஒப்படைத்தனர். அப்போது முதலே சிந்துதேஷ் தனிநாடு கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.
சிந்து மாகாணம், பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தங்கள் பகுதியை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனி நாடாக சிந்துதேஷ் ஆக மாற்ற வேண்டும் என்று சிந்தி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு சிந்துதேஷ் புரட்சிகர ராணுவப்படை உட்பட சில அமைப்புகள் ஆதரவாக செயல்படுகின்றன. 1967-ல் முதன் முதலாக தனி சிந்துதேஷ் கேட்டு சிந்து மாகாணத் தலைவர் ஜிஎம் சையது, பீர் முகமது அலி ரஷ்டி ஆகியோரது தலைமையில் போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று ஜிஎம் சையதுவின் 117-வது பிறந்த தினத்தையொட்டி பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் கோரி சிந்ததேஷ் போராட்டக்காரர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அடங்கிய படம் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி பேரணி நடத்தியது கவனத்தை ஈர்த்துள்ளது.
சிந்து பகுதியிலுள்ள சான் (Sann) நகரில் இந்தப் பேரணி நடந்தது. பேரணியில் பதாகைகளுடன் சுதந்திர கோஷங்களை எழுப்பியும் போராடினர். ஒருவர் தான் கையில் வைத்திருந்த பதாகையில் `மோடி - பாகிஸ்தானிடமிருந்து எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்றும் கூறியிருந்தனர்.
பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் சிந்து முத்தாஹிதா மஹாஸின் தலைவர் ஷாஃபி முஹம்மது, ``சிந்தி மக்களின் வளமான கலாச்சாரம் மீதும் வரலாற்றின் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்குப் பின்பும் அதன் தனித்துவத்தைக் காப்பாற்ற போராடி வருகிறோம்" என்றார்.