இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்.
1942ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவர் இவர். இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவர். அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள்.
தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு.
ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் என்ற புத்தகம் தமிழக வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நீண்ட காலமாக உடல் நலம் குன்றி இருந்த ஹாக்கிங், பிரிட்டனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். மூன்று பிள்ளைகளும் சேர்ந்து அவரது இறப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டனர்.