ட்விட்டர், கூகுள், அமேசான் வரிசையில் இணைந்த பிலிப்ஸ்... ஏன் தெரியுமா?

ட்விட்டர், கூகுள், அமேசான் வரிசையில் இணைந்த பிலிப்ஸ்... ஏன் தெரியுமா?

ட்விட்டர், கூகுள், அமேசான் வரிசையில் இணைந்த பிலிப்ஸ்... ஏன் தெரியுமா?
Published on

பிரபல எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனமான பிலிப்ஸ், தன்னுடைய ஊழியர்களில் 6,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சியடைந்த சுவாச சாதனங்களை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த 6,000 பேரில், 3,000 பேரை இந்த ஆண்டுக்குள்ளும், மீதியுள்ள 3,000 பேரை 2025க்குள் நீக்க முடிவு செய்திருக்கிறது. இது அந்நிறுவன ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 5% ஆகும்.

இதுகுறித்து பிலிப்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி ராய் ஜேக்கப்ஸ், "எங்கள் பங்குதாரர்களுக்கு 2022 மிகவும் கடினமான ஆண்டாகும். மேலும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில் முதல்கட்டமாக 2025க்குள் 6000 பணியாளர்களைக் குறைக்க இருக்கிறோம். அதில் பாதிப் பேரை இந்த ஆண்டு நீக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் பிலிப்ஸ் நிறுவனம், கடந்த சில மாதங்களாவே கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. அந்நிறுவனம் தயாரித்த மருத்துவ உபகரணங்களில் ஒன்றான சுவாசக் கருவிகளில் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு சந்தையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இதன் காரணமாக இந்திய மதிப்பில் 10,500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் கண்டது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் சிஇஓ பதவியை பிரான்ஸ் வான் ஹூடன் ராஜினாமா செய்ய, புதிய சிஇஓவாக ராய் ஜாகோப்ஸ் பொறுப்பேற்றார்.

ராய் பொறுப்பேற்றவுடன், விற்பனை குறைவு, வருவாய் இழப்பு போன்ற சிக்கலில் தவித்து வரும் நிறுவனத்தை சீரமைக்கும் விதமாக கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 4,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். தற்போது, இந்த ஆண்டும் அந்த நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளார்.
சமீபகாலமாக உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தங்கள் நிறுவன ஆட்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ட்விட்டர், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், ஸ்நாப்சேட், பைஜூஸ், வேதாந்து, அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com