கொரோனா வைரஸ் காய்ச்சலால் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தால் சீனாவிற்கு வெளியே நிகழ்ந்திருக்கும் முதல் மரணம் இதுவாகும்.
கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவின் வுகான் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, மணிலா விமானநிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தகவலை உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுத்து நிறுத்தப்போவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.