பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானாவ் தீவில் உள்ள மலைப்பகுதியான மசாரா கிரமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ டி ஒரோ மாகாணத்தின் மசாரா மற்றும் மின்டானாவ் தீவின் மாக்கோ ஆகிய நகரங்களுக்கு இடையே ஏராளானமான தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான சுரங்க தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிக்காக 100 க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்படுள்ளனர். கனரக மண் அள்ளும் கருவிகள் உள்ளிட்டவற்றை கொண்டு மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும்பணியில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின்படி, சரங்கதொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் உட்பட 51 பேர் இன்னும் காணவில்லை.மேலும் ஒரு டஜன் உடல்கள் சேற்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் Edward Macapili, இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், “சம்பவம் நடந்து கிட்டதட்ட ஒரு வாரம் ஆகிறது, ஆகவே அங்கு யாரும் உயிருடன் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். மேலும் இப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.ஆகவே விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது. 50 மீட்டர் ஆழத்தில் தோண்டப்பட்டு தேடப்பட வேண்டி உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மண்சரிவில் சிக்கி 3 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளது ஒரு அதிசயம் என்று மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த இடர்பாடுகளில் சிக்கி 32 பேர் காயமடைந்த நிலையில், 55 வீடுகள் மூன்று பேருந்துகள், ஒரு மினிபஸ் போன்ற வாகனங்கள் புதையுண்டன.
மேலும் தெற்கு தீவுகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்காவின், ’சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி’ மூலமாக மனிதாபிமான உதவியாக 1.25 மில்லியன் டாலர்களை வழங்குவதாக மணிலாவில் உள்ள தூதரகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.