கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளும் நடைமுறையை கொண்டு வரலாம் என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் அடிக்கடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதைவிட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பர்லா கூறியிருக்கிறார். இஸ்ரேலைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், ஃபைசர் மற்றும் பயோ டெக்கின் கொரோனா தடுப்பூசி அதிக மாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸால் ஏற்படக்கூடிய கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சில நாடுகள் கூடுதல் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்தி இருப்பதையும், இரு தடுப்பூசிகளுக்கு இடையேயான கால இடைவெளியை குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார். அடிக்கடி தடுப்பூசி என்பதைவிட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி எனில், அதனை மக்கள் நினைவில் கொள்வது எளிதாக இருக்கும் என்றும் ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பர்லா குறிப்பிட்டுள்ளார்.