’பெப்சி’ நிறுவனத் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்.
சென்னையை சேர்ந்தவர் இந்திரா நூயி. இங்குள்ள கிறிஸ்தவ கல்லூரியில் படித்த இவர், பின்னர் கொல்கத்தா ஐஐஎம்.மில் மேலாண்மை பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்கா சென்றார். கடந்த 12 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்தார். இப்போது அப்பொறுப்பில் இருந்து விலக உள்ளார். இருந்தாலும் 2019 ஆம் ஆண்டுவரை அந் நிறுவனத்தின் தலைவராக அவர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பின், புதிய தலைவராக 22 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ராமோன் லகார்டா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெப்சி நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள், கார்ப்பரேட் நிர்வாகம், பொதுக்கொள்கை, அரசு விவகாரங்கள் ஆகியவற்றை இவர் கவனித்து வந்தார்.
’பெப்சி’யின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து இந்திரா நூயி வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, பெப்சி போன்ற பெரிய நிறுவனத்தை நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பதை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக பெப்சி வளர்ச்சிக்காகச் செயல்பட்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். என் தலைமையில் எங்கள் குழு சிறப்பாகச் செயல் பட்டதை நினைத் துப் பெருமைப்படுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் 13 வது இடத்திலும், 2015-ம் ஆண்டு பார்ச்சூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இந்திரா நூயி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.