பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு ரோபோ பதில் அளித்திருப்பது உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் நம்மை பிரம்மிக்க வைத்து வருகிறது. குறிப்பாக ரோபோக்களின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாளடைவில் மனிதர்களை போன்று சாலைகளில் ரோபோக்களும் வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
பெப்பர் என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்கை நுண்ணறிவு ரோபோ பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளது. நான்காவது தொழிற்துறை புரட்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற விவாதத்தில் பெப்பர் பங்கேற்றது அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளது. கலந்தாய்வில் கலந்து கொண்டது மட்டுமல்லாது, அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகவும் ஸ்மார்ட்டாக பதிலளித்துள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே ஆலோசனையும் வழங்குகிறது.
சோதனை முயற்சியாக மிடில்செக்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்புக் குழு கூட்டத்தில், பெப்பர் ரோபோ மாணவர்களுடன் ஒரு மேஜையில் அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, நாட்டின் முனேற்றத்திற்கு ரோபோக்களின் பங்கு, ரோபோக்களின் வளர்ச்சி போன்றவை குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு பிரிவு கேள்விகளுக்கு பெப்பர் பதிலளித்துள்ளது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, முதியோர்களை கவனித்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளையும் பெப்பர் செய்யும்.
சர்வதேச ஆராய்ச்சி திட்ட வளர்ச்சிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள பெப்பர் ரோபோ கல்வி, நாட்டின் முன்னேற்றம், பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம் போன்ற முக்கிய முடிவுகளுக்கு ஆலோசனை வழங்கவுள்ளது. பெப்பர் ரோபோட்டின் செயல்களை ஆராய்ந்த பின்னர், ரோபோக்களை எப்படி கல்விமுறை மற்றும் ஆட்டோமேஷன் துறைகளில் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்படும்.