உலகில் சிரிப்பும் நகைச்சுவையும் மனித மனங்களின் இறுக்கத்தைத் தளர்த்தி மகிழ்ச்சிப் பூக்களைத் தூவுகின்றன. கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வில், மனிதர்கள் 23 வயதில் இருந்து சிரிப்பை இழக்கத் தொடங்குகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் நகைச்சுவை உணர்வு தொடர்பான ஆய்வறிக்கையை ஸ்டான்போர்டு பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஜெனிபர் ஆக்கர், பேராசிரியர் நவோமி பாக்டோனஸ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். உலகம் முழுவதும் 166 நாடுகளில் 1.4 மில்லியன் மக்களிடம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறீர்கள் என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
பொதுவாக 23 வயதில் இருந்து மனிதர்கள் சிரிப்பை மறக்கிறார்கள். காரணம், அப்போதுதான் அவர்கள் வேலைகளுக்குச் செல்லத் தொடங்குகிறார்கள். "நாம் வேலைக்குச் செல்லும்போது திடீரென தீவிரமான மற்றும் முக்கியமானவர்களாக ஆகிவிடுகிறோம். அங்கு சிரிப்பை வணிகத்துக்காகவும் வேலைக்காகவும் பயன்படுத்துகிறோம்" என்கிறார்கள் ஆய்வுப் பேராசிரியர்கள்.
பேராசிரியர்கள் ஜெனிபர் மற்றும் நவோமி ஆகிய இருவரும் பணியிடங்களில் நகைச்சுவை உணர்வை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என தங்களது மாணவர்களுக்குப் பாடம் நடத்திவருகின்றனர். நான்கு வயது குழந்தை ஒரு நாளில் 300 முறை சிரிக்கிறது. அதேபோல நாற்பது வயது மனிதர் பத்து வாரங்களில் 300 முறை சிரிக்கிறார் என ஆய்வில் தெரியவந்துள்ளது.