கொரோனா தடுப்பூசி என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடா, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ளன. ஆனால், பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எல்லை தாண்டி செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற கனடா அரசின் நிபந்தனையை எதிர்த்து இரண்டு வாரங்களாக லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தால், கனடாவே ஸ்தம்பித்து போயுள்ளது. இந்த போராட்டம் கனடாவோடு ஓயாமல் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. நியூசிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகரிலும் தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர். கேன்பெராவில் சுமார் 10 ஆயிரம் பேர் நடத்திய போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மக்களுக்கு போராட்டம் நடத்த உரிமையுள்ளது என கூறியுள்ள ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.