அத்யாவசியப் பொருட்களுக்கு தவிக்கும் மக்கள் - கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

அத்யாவசியப் பொருட்களுக்கு தவிக்கும் மக்கள் - கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை
அத்யாவசியப் பொருட்களுக்கு தவிக்கும் மக்கள் - கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை
Published on

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், எரிவாயு சிலிண்டருக்கும், அரிசி, கோதுமை, காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களுக்குமான தட்டுப்பாடு மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கியிருக்கிறது.

இலங்கையில் டீசலுக்கும், பெட்ரோலுக்கும், மண்ணெண்ணெய்க்கும் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்காக பல மணிநேரம் மக்கள் கொளுத்தும் வெயிலில் காத்து நிற்கிறார்கள். பல மணிநேரம் காத்திருந்தபிறகும் டீசலோ, மண்ணெண்ணெயோ கிடைக்காமல் திரும்பும் நிலையே உள்ளது. ரொட்டிக்கும், பாலுக்கும், காய்கறிக்குமாக குடும்பம் குடும்பமாக தவிக்கிறார்கள் இலங்கை மக்கள். டீசல் இல்லாமல் விவசாயப்பணிகளை மேற்கொள்ள வழியின்றி பயிர்கள் வீணாகும் நிலையும் காணப்படுவதால் விவசாயிகளின் நிலையும் கவலைக்குரியதாகி இருக்கிறது.

இலங்கையில், சம்பா அரிசி இந்திய ரூபாய் மதிப்பில் கிலோ 650 ரூபாய் முதல் 718 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிவப்பு அரிசி கிலோ 684 ரூபாய்க்கும், கோதுமை மாவு கிலோ 752 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டர் விலையோ 13,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் லிட்டருக்கு 869 ரூபாய்க்கும் ஒரு முட்டை விலை 102 ரூபாயாகவும் இருக்கிறது.

இலங்கைக்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் சுற்றுலாவும் தேயிலை ஏற்றுமதியும் உள்ள நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரும் இலங்கை பொருளாதாரத்தை உலுக்கிவருகிறது. இலங்கையிலிருந்து தேயிலை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் 2 ஆவது இடத்தில் ரஷ்யா உள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் தேயிலை உற்பத்தி வீழ்ச்சிப்போக்கில் பதிவாகியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், தேயிலை உற்பத்தி சுமார் 20 சதவிகித வீழ்ச்சி கண்டுள்ளது. உற்பத்தி சரிவால், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அந்நிய செலவாணியை ஈட்டும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தாலும், இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, மின்தடையால் சுற்றுலாப்பயணிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சுற்றுலாவுக்கு சென்றவர்கள் எரிபொருள் இன்றி நடுவீதியில் நிற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், லாரிகளிலும், மாட்டுவண்டிகளிலும் திரும்பும் நிலை உள்ளதால் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்ற நாடு என்ற சிறப்பையும் இலங்கை இழந்து தள்ளாடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com