விஸ்வரூபம் எடுத்த பெகாசஸ் விவகாரம்: மொபைல் ஃபோன், எண்ணை மாற்றிய பிரான்ஸ் அதிபர்
இஸ்ரேல் நாட்டின் பெகசாஸ் என்ற மென்பொருளை கொண்டு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரின் தொலைபேசிகளையும் உளவு பார்த்ததாக சில தினங்களுக்கு முன் சர்வதேச பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அன்றுமுதல் இன்றுவரை இவ்விவகாரம் இந்திய அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா போலவே பிரான்ஸ், மெக்சிகோ, மொராக்கோ, ஈராக் என பல நாடுகளிலும் முக்கிய பிரமுகர்களும் இந்த பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனால் உலகளவில் அதிர்வலைகள் ஏற்பட்டது.
பல தலைவர்கள் இதற்கு எதிர்வினையாற்றி வரும் நிலையில், உளவுப்பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இருப்பதாக சொல்லப்படும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தற்போது தனது மொபைல் ஃபோனையும், மொபைல் நம்பரையும் மாற்றியுள்ளார். பெகாசஸ் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிபர் அலுவலக அதிகாரி நேற்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், உலகளவில் எடுக்கப்பட்ட முதல் அதிகாரபூர்வ நடவடிக்கையாக, இதுவே இருக்கிறது.
இருப்பினும் அதிபருக்கு ஏற்கெனவே பல மொபைல் எண்கள் இருப்பதால், இது கூடுதல் பாதுகாப்பாக எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை என்றும்; இதன்மூலம் எந்த விதத்திலும் அதிபர் ஒட்டுக்கேட்கப்பட்டார் என்பதை தாங்கள் உறுதிசெய்வில்லை என்றும் அதிபரின் அலுவலக அதிகாரி கூறியுள்ளார்.
பிரான்ஸ் அரசு செய்தித்தொடர்பாளர் கேப்ரியல் இதுகுறித்து கூறும்போதும், பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக முன்னெச்சரிக்கையாக இப்படி சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவே கூறியுள்ளார்.