”பிழையான தகவல்களைச் சொல்லி வழிநடத்தியவர்களால் உந்தப்பட்டு பிரபாகரன் குறித்து பேட்டியளித்திருக்கலாம்” என தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறை டிவிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், “போராட்ட தடைக்குப் பிறகு, நாங்கள் எந்தவொரு ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடாமல் ஜனநாயக வழியில், அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நலவாழ்வு பணியை மேற்கொண்டு வருகிறோம். புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் மக்கள், அரசு தலைவர்கள், அதிகாரிகள் என எல்லோரிடமும் எங்கள் நியாயமான கோரிக்கைகளைத் தெரியப்படுத்தி, தற்போது அவர்களுடைய மனங்களில் ஓரளவு மாற்றம் வந்து, தமிழர் விடுதலைப்புலிகள் மீதான விடுதலை தடை நீக்கத்திற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில், பழ.நெடுமாறனின் தெரிவித்திருக்கும் அறிவிப்பால், விடுதலைப்புலிகளை மீண்டும் அது தொடர்பான முயற்சிகளை எடுக்க உருவாக்கி உள்ளது. அதேநேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இதன் உண்மை நிலை தெரிந்தாலும், இந்த அறிவிப்புகளைக் காரணம் காட்டி, முன்னாள் போராளிகளை மிரட்டுகின்ற செயல்பாடுகளை புலனாய்வு அதிகாரிகள் மேற்கொள்வர். இதை உணராதவராகத்தான் இருக்கிறார், பழ.நெடுமாறன். அவருக்கு, தலைவர் பிரபாகரன் மீது பேரன்பு உண்டு.
அந்த அடிப்படையிலே அவரிடம் பிழையான தகவல்களைச் சொல்லி வழிநடத்தியவர்களால் உந்தப்பட்டு பிரபாகரன் குறித்து பேட்டியளித்திருக்கலாம். குறிப்பாக, வைகோ, சீமான், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த தகவல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பழ.நெடுமாறன் தலைவர் மீதிருந்த அன்பின் காரணமாகவே இதை வெளிப்படுத்தியுள்ளார். பழ.நெடுமாறன் தலைவர் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகச் சொல்வது தவறு. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதமே தலைவரின் வீரச் சாவை உலக மக்களுக்கு தெரியப்படுத்தி இருந்தோம்” என அதில் தெரிவித்துள்ளார்.