ஜெர்மனியின் ரைன் நதியின் மீது சென்ற கேபிள் கார்கள் பழுதடைந்ததால், அந்தரத்தில் சிக்கிய 60-க்கும் மேற்பட்டோரை மீட்புப்படையினர் அதிரடியாக மீட்டனர்.
கொலோன் நகரில் உள்ள ரைன் நதியின் மீது 32 கேபிள் கார்களில் சுமார் 100 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட பழுதால், கேபிள் கார்கள் ஆற்றின் மீது அந்தரத்தில் நின்றன. அவற்றை சரி செய்து, மீண்டும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதையொட்டி, கொலோன் நகர மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது.
அங்கு விரைந்த மீட்புப் படையினர், ஒவ்வொரு கேபிள் காரிலிருந்தும் பயணிகளை கயிறு மூலமும், தீயணைப்பு வாகனங்களின் மிகப்பெரிய ஏணிகள் மூலமும், பத்திரமாக கீழே இறக்கினர். இந்த மீட்புப் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். சுமார் 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து வருகிறது. எதனால் இந்த கேபிள் கார்கள் இயக்கத்தில் பழுது ஏற்பட்டது என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.