நடுவானில், விமானத்தின் கதவைத் திறந்த போதை இளைஞரால் மற்றப் பயணிகள் பீதி அடைந்தனர். அதே விமானத்தில் மேலும் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து தாய்லாந்தின் புக்கெட் தீவுக்கு, நார்ட்வின்ட் என்ற விமானம் சென்றுகொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, போதை இளைஞர் ஒருவர், விமானத்தின் அவசர கால வழியைத் திடீரெனத் திறக்க முயன்றார். இதனால் அருகில் இருந்த பயணிகள் அலறி கூச்சல் போட்டனர். உடனடியாக அங்கு வந்த விமான ஊழியர்கள், அவரைச் சமாதானப்படுத்தி உட்கார வைக்க முயன்றனர். முடியவில்லை. அவர் அதைத் திறப்பதிலேயே குறியாக இருந்தார். பின்னர் ஏழெட்டு பயணிகள் சேர்த்து அந்த இளைஞரின் கையை கட்டி உட்கார வைத்தனர்.
இதுபற்றி விமானிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உஸ்பெகிஸ்தானில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டது. அங்கு, அந்த போதை இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 4 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் புக்கட் நோக்கிப் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் பிரச்னை.
போதை இளைஞர்களுக்குள் முட்டல், மோதல் ஏற்பட்டது. அவர்கள் பயங்கரமாக கத்தியதால் பிரச்னை ஏற்பட்டது. விமானப் பணியாளர்கள் அவர்களைப் பிரித்து தனித் தனியாக அமர வைத்தனர். ’அப்பாடா ஒரு வழியா பிரச்னை முடிந்தது’ என்று மற்ற பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதற்குள் ஒருவர், நேராக விமானத்தின் கழிவறைக்குள் சென்று புகைப்பிடிக்க ஆரம்பித்தார். புகை விமானத்துக்குள் பரவி, பயணிகள் இருமத் தொடங்கிவிட்டனர். உடனடியாக அங்கு ஓடிய, விமானப் பணியாளர்கள், அந்த இளைஞரின் சிகரெட்டை அணைத்தனர்.
இந்த அடுத்தடுத்த திக் சம்பவங்களால், விமானம் புக்கட் போய் சேருமா? என்று பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து விமானம் தாய்லாந்து போய் சேர்ந்ததும் விமானி, போலீசில் புகார் செய்தார். அவர்கள், அந்த இளைஞர்களை கைது செய்தனர்.
இதுபற்றி விமானத்தில் பயணித்த டெமிடோவா என்பவர் கூறும்போது, ‘விமானத்தில் இதுபோன்ற பயங்கர சம்பவங்களை பார்ப்பது இதுதான் முதன்முறை. நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோமே, அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.