பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசியால் உயிருத்து ஆபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் திட்டம் உடனடியாக கைவிடப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சனோஃபி என்ற மருந்து நிறுவனம் இந்தத் தடுப்பூசியால் நோய் பாதிக்காத குழந்தைகளும், பெரியவர்களும் வெகுவாக பாதிக்கப்படக் கூடும் என எச்சரித்தது. ஏற்கெனவே சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இந்த மருந்து பாதுகாப்பானதா என ஆய்வு செய்யாமல் அந்த மருந்துக்கு அனுமதி அளித்தது ஏன்? என்று பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தி, ஆதாரங்கள் சிக்கினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.