பனாமா ரகசிய ஆவணங்கள் வெளியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.
எதிர்கட்சிகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டும் என்பது மக்களின் கருத்தாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நவாஸ் ஷெரீஃபின் குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளதாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கூட்டு விசாரணைக் குழு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனால், நவாஸ் ஷெரீஃபை உச்சநீதிமன்றமே தகுதிநீக்கம் செய்யும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நவாஸ் ஷெரீஃப், கடைசி மூச்சு இருக்கும்வரை இந்த விவகாரத்தை எதிர்த்துப் போராடுவேன் என்று அமைச்சரவை சகாக்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவாஸ் ஷெரீஃபின் ராஜினாமா குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் எதிர்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.