வாஷிங்டன் சதுக்கத்தில், பாலஸ்தீன கொடிகளுடன் பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒலிபெருக்கி மூலம் முழக்கமிட்டபடி போராட்டக்காரர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். இதில் பாலஸ்தீன இளைஞர் இயக்கம், அல் அவ்டா நியூயார்க் மக்கள் மாநாடு ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில், இஸ்ரேல் நாட்டின் கொடிகளுடன் சிலர் வாஷிங்டன் சதுக்கத்தில் குவிந்தனர். இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேல் அல்லது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் பல்வேறு நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.
அந்தவகையில், அமெரிக்காவின் முக்கியமான நகரான நியூயார்க்கில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.