20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள்... இஸ்ரேலைச் சிதைத்த பாலஸ்தீன ஆயுதக்குழு! போர் பதற்றம் அதிகரிப்பு!

இஸ்ரேல் மீது, அல் அக்சா ஃபிளட் என்ற பெயரில் பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது.
தாக்குதல்
தாக்குதல்Twitter
Published on

20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

உலகின் பலமிக்க நாடுகளுள் ஒன்றான இஸ்ரேல் மீது, காசா முனையில் செயல்பட்டுவரும் ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இன்று (அக். 7) திடீர் தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. இதில் பல்வேறு ஏவுகணைகள் அந்நாட்டின் நகரங்கள் மீது தாக்கியுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அல் அக்சா ஃபிளட் என்ற பெயரில் பாலஸ்தீன ஆயுதக்குழு தாக்குதல்!

இஸ்ரேலிய எல்லை நகரங்களில் உள்ள காவல் நிலையங்களை பாலஸ்தீன ஆயுதக்குழுவினர் கைப்பற்றியுள்ளதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அல் அக்சா ஃபிளட் என்ற பெயரில் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடங்கியுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக்குழு ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலியர் தற்போது வரை 22 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போருக்கு தயார் என இஸ்ரேல் அறிவிப்பு!

பாலஸ்தீன ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.

திடீர் தாக்குதல் ஏன்? - ஆயுதக் குழுவினர் வெளியிட்ட தகவல்!

இந்த தாக்குதல் குறித்து இஸ்லாமிய ஆயுதக் குழுவினர் டெய்ஃப், ‘இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும். இதுகுறித்து நாங்கள் ஏற்கெனவே இஸ்ரேலை எச்சரித்துள்ளோம். இஸ்ரேலிய ராணுவம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இதனால் இந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அதனால்தான் ஆபரேஷன் அல்அக்சா ஃபிளட்டைத் தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.

பதிலடி கொடுத்த இஸ்ரேல் - விரைவில் வெற்றிபெறும் என அறிவிப்பு!

இதுதொடர்பாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ’ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது. பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கு, "ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இந்தப் போரில் இஸ்ரேல் ராணுவம் விரைவில் வெற்றிபெறும்" எனத் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காசா கோபுரம் தகர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடைபெறும் மோதலுக்கு உண்மையான காரணம் 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் மோதல் இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாக நிலவிவருகிறது. அதாவது பாலஸ்தீனத்தில் காசாமுனை, மேற்குக் கரை என இரண்டு பகுதிகள் உள்ளன. இந்த காசாமுனை பகுதியானது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஹமாஸ் அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது.

அதேபோல் மேற்குக் கரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். இந்த மேற்குக் கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பல்வேறு போராளிக் குழுக்கள் செயல்படுகின்றன. இவர்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மோதல்!

இதனாலேயே அந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்குமிடையே மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கமாக இருந்துவருகிறது. தங்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறி, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலியா்கள் மீது பாலஸ்தீனா்கள் தாக்குதல் நடத்துவதும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையின் ஜெனின் நகரில் போராளி குழுக்கள் சிலர் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 3ஆம் தேதி நள்ளிரவு மேற்குக் கரை பகுதியைச் சோ்ந்த ஜெனின் நகருக்குள் புகுந்த சுமாா் 2,000 இஸ்ரேல் படையினா், அங்குள்ள அகதிகள் முகாமை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இந்த நடவடிக்கையில் 1,000 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 30 ஆயுதக் குழுவினா் கைது செய்யப்பட்டதாகவும் அப்போது ராணுவம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்
பாலஸ்தீனத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தாக்குதல்.. அத்துமீறுகிறதா இஸ்ரேல்? தற்போதைய நிலைமை என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com