காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சட்டப் பேரவை உடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய தரப்பில் பதில் கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்து சென்றது. எனினும் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல போவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது தொடர்பாக நாங்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக உள்ள அனைத்து சட்ட நுணுக்கங்களையும் ஆராய்ந்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.