கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை கட்டடத்தில் நான்கு ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 4 பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 4 பயங்கராவதிகளும் கொல்லப்பட்டனர். மேலும், பொதுமக்களில் ஒருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் மெயின் கேட்டின் வழியாக கைக்குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு உள்ளே நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உள்ளூர் செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் காவல்துறை கூறுகையில், “இந்த தாக்குதலில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் தனியாக இருந்த ஒரு வாகனத்தையும் போலீசார் கண்டுபிடித்து வெடிகுண்டு அகற்றும் குழுவினரால் அது அகற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த இடங்களை சுற்றி சீல் வைத்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் பங்கு சந்தையின் இயக்குநர் அபித் அலி பிபிப் கூறும்போது, “பாகிஸ்தான் பங்கு சந்தையில் ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் எங்கள் பார்க்கிங் பகுதியிலிருந்து வந்து அனைவரது மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதல் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் மீதான தாக்குதலுக்கு சமம் என சிந்து முதல்வர் முராத் அலி ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.