அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இதில், இம்ரான் கான் ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களில் வெற்றிபெற்று 2வது இடத்திலும், 54 இடங்களிலும் வெற்றிபெற்ற பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 3வது இடத்தையும் பிடித்து உள்ளன. இதுதவிர, முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் 17 இடங்களையும், வேறு சில சிறிய கட்சிகள் 17 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.
எனினும், பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான முயற்சியில் கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. தற்போது அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தானின் நீண்ட இழுபறிக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.
ஆம், தற்போதைய தகவலின்படி ஷெரீப் - பிலாவல் பூட்டோ கூட்டணி அமைய இருக்கிறது. கூட்டணி அரசு அமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவரான ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார். இரு கட்சிகளின் தலைவர்களும் அரசை அமைப்பதற்காக மீண்டும் கைகோர்க்க முடிவு செய்து, அதனை உறுதி செய்துள்ளனர். தேசத்தின் சிறந்த நலனுக்காக என கூறி அவர்கள் கூட்டணி அரசை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால், முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகவும், முன்னாள் அதிபரான சர்தாரி நாட்டின் புதிய அதிபராகவும் வரக்கூடும். அதற்கேற்ப இருவரையும் அதற்கான வேட்பாளராக பிலாவல் பூட்டோ உறுதிப்படுத்தி உள்ளார்.