சீனாவின் தூண்டுதலின் பேரில் ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டிவருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு இந்திய வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரில் தீவிரவாதத்தை அதிகரித்து இந்தியாவுக்கு தொல்லைக் கொடுக்குமாறு பாகிஸ்தானை சீனா தூண்டிவிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் சீனா, பாகிஸ்தானை தூண்டி வருவதாகவும், ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் குவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்க சீனா பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதாகவும் தெரிகிறது. அண்மையில் ஜம்முகாஷ்மீரில் சீன ட்ரோன்களும், சீன ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடதக்கது.