லட்சக்கணக்கில் பாக்கி உள்ள மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின்சார துண்டிப்பை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு மின் விநியோக வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாத் மின் விநியோக வாரியம் நேற்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், மின் கட்டண பாக்கியை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
அதில், ”தற்போது பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மின் நிறுவனத்திற்கு ரூ.41 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்து உள்ளது. கடந்த மாதம் செலுத்த வேண்டிய ரூ.35 லட்சம் மின்சாரக் கட்டணத்தையும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் செலுத்தவில்லை. இது தொடர்பாக பலமுறை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் அனுப்பியும் பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை. இது தொடர்ந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் என சட்டம் உள்ளது” என்று எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மின்சாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பாகிஸ்தானில் சுமார் 22 ஆயிரம் - 24 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும் மின்சாரத் தேவை ஒவ்வொரு ஆண்டும் 5% அதிகரித்து வருகிறது. அரசுத் துறைகள் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதும் குறைந்த மின் உற்பத்திக்கு ஒரு காரணம். பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு 24,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதாகக் கூறியது. ஆனால் அரசாங்கத்தின் ஒரு நிறுவனமான என்.டி.டி.சி அதை உறுதிப்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்.