பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானி ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தை, தனது ஷிப்ட் முடிந்துவிட்டதாகக் கூறி மீண்டும் இயக்க மறுத்த சம்பவம் பரபரப்பை உருவாக்கியது.
PK-9754 என்ற விமானம் ரியாத்தில் இருந்து புறப்பட்டு இஸ்லாமாபாத் வரை செல்லவிருந்தது. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக விமானி சவுதி அரேபியாவில் உள்ள தம்மாமில் விமானத்தை தரையிறங்கினார். அவசரமாக தரையிறங்கிய பிறகு தனது பணி0நேரம் முடிந்துவிட்டதாகக்கூறி விமானி மீண்டும் விமானத்தை இயக்க மறுத்தால் சிக்கல் ஏற்பட்டது.
பெயர் குறிப்பிடப்படாத அந்த விமானி தனது பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி விமானத்தை இயக்க மறுத்த பிறகு, விமானத்தில் இருந்த பயணிகள் இறங்க மறுத்து, தங்கள் பயணம் தாமதமானதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். நிலைமை மேலும் பதட்டமானதால், அதை கட்டுக்குள் கொண்டு வர தம்மாம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த பயணிகள் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
"விமானப் பாதுகாப்புக்கு அவசியம் என்பதால் ஒரு விமானி தேவையான அளவு ஓய்வெடுக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.