அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்களின் கட்சிகளான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, அன்றைய தினமே உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. அதன்படி, இம்ரான் கான் ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களில் வெற்றிபெற்று 2வது இடத்திலும், 54 இடங்களிலும் வெற்றிபெற்ற பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 3வது இடத்தையும் பிடித்து உள்ளன. இதுதவிர, முட்டாஹிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் 17 இடங்களையும், வேறு சில சிறிய கட்சிகள் 17 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.
எனினும், பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரத்தில், பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்ற நாளில் இருந்து 3 வாரங்களுக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அந்நாட்டு அரசியல் சாசன விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் முடிந்து 5 நாட்களாகியும் இன்னும் அந்த நாட்டில் யார் பிரதமர் என்ற கேள்வியே எழுந்துள்ளது. அதற்குக் காரணம், அந்நாட்டில் கூட்டணி அரசை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான முயற்சியில் கடந்த 2 நாட்களாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதில் எந்தச் சுமுக உறவும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பிரதமர் பதவி யாருக்கு என்பதில் இருக்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 4வது முறையாக தாமே பிரதமராக வேண்டும் என நவாஸ் ஷெரீப் நினைத்து அந்த இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி, பிலாவல் பூட்டோவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுதவிர, பஞ்சாப் மாகாண முதல்வர், இன்னும் பிற அமைச்சர்கள் பதவிகள் குறித்த பேச்சுவார்த்தையிலும் சுமுக பேச்சுவார்த்தை எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. ஆயினும் இம்ரான் கான் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் இல்லாமல் ஆட்சியை அமைப்பதில் நவாஸ் ஷெரீப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக, வெற்றிபெற்ற அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில்தான், பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை, நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இவர் அவருடைய சகோதரர் என்பதும், இம்ரான் கான் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இவரே பிரதமராக இருந்தார் என்பதும், இவருடைய ஆட்சிக்காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசு அமைக்கப்பட்டதுடன், பொதுத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப்பின் முதல்வராக தமது மகள் மரியம் நவாஸையும் நியமனம் செய்திருப்பதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, பிரதமர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் நவாஸுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிலாவல் மற்றும் அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி ஆகியோருக்கு ஷபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் பாகிஸ்தானில் எந்த முக்கிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி ஆட்சி அமைக்கும் யோசனையை இம்ரான் கான் நிராகரித்தார். மேலும் சிறிய கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி, பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் எதிர்க்கட்சியாக இருப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் இம்ரான் கான் ஆதரவின் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற சுயேட்சை வேட்பாளர்கள் பலர், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி பல நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தனர். அப்படி தாக்கல் செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்ட மனுக்களை லாகூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.