குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், அவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வகை செய்யும் தீர்மானமானது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், அவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வகை செய்யும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அலி முகமது கான், ''குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களை தூக்கிலிட்டால் மட்டுமே போதாது. பொது இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்'' என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
அதேவேளையில் இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பும் கிளம்பியது. பொது இடத்தில் தூக்கிலிடுவது ஐநா விதிகளுக்கு எதிரானது என்றும், உலக நாடுகளின் எதிர்ப்பை சுமக்க வேண்டிவரும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதிக எம்பிக்களின் ஆதரவினால் பொது இடத்தில் தூக்கிலிட வகை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.