உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு முழுமையான தடை விதித்துள்ளது
சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதித்துள்ளது என்று அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, சர்க்கரை ஏற்றுமதியை முழுமையாக தடை செய்து உத்தரவிட்டுள்ளேன். சர்க்கரை கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் கடமைகளில் அலட்சியமாக இருப்பவர்கள் மீது சகிப்புத்தன்மை காட்டப்படாது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது உத்தரவுகளை அமல்படுத்துவது குறித்த விவரங்களை உடனுக்குடன் தனக்குத் தெரிவிக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளிடம் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார். உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீதான தடை என்பது, நாட்டில் அதன் விலையை உயராமல் தடுக்கும் நோக்கம் கொண்டது என்று அரசின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ரமலான் பண்டிகையின்போது மக்களின் நலனுக்காக பல்வேறு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் முன்முயற்சி எடுத்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் முதல் சர்க்கரை மற்றும் மாவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் சர்க்கரை பற்றாக்குறை அதிக அளவில் பதிவாகியுள்ளது. அங்குள்ள கடைகளில் சர்க்கரை மற்றும் பிற பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.